|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts



அயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன? அங்கு அடைந்தது என்ன?



அடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.


இந்தக் கேள்விக்கான‌ விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென‌ தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.


பெற்றதையும், பெறாததையும் ஆராய்வதற்க்கு முன், நான் ஏன் அயல் நாடு வந்தேன் என சிறிது எண்ணிப்பார்க்கின்றேன், கல்லூரியில் பட்டப்படிப்பு, அதனிடையே ஒரு பட்டயப்படிப்பு, பட்டம் பெற்றவுடன், மேலும் படிப்பைத் தொடர்வதா, அல்லது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்க்குள் நுழைந்து விடுவோமா என ஒரு சிறிய மன‌ப் போராட்டம்.

இதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.

சரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.

அங்கும் இங்குமாய் சில மாதங்கள் ஓடியது, அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா அதான் உன்னோட எல்லா சொந்தங்களும் இருக்காங்கள்ள, இதுவே பெரும்பான்மையானவர்களின் அறிவுரை, ஆவல், வேண்டுகோள்.

சரி ஏற்பாடும் செய்தாகிவிட்டது, வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், எல்லோரைப்போல நானும் தீர்மானித்துக் கொன்டேன். நினைக்கும் போது நல்லாத்தான் இருக்கு.

சென்னையிலிருந்து புறப்பட்ட‌ விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.

விமானம் தரையிறங்கி முதன்முறையாக ஒரு அயல் நாட்டிற்க்குள் நுழைகிறேன், ஆயிரம் கணவுகளுடன்.

விமான நிலையத்தில் பல முகங்கள், இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே அதிகமாக‌ காணப்படனர், அதிலும் என்னைவிட வயதில் பலமடங்கு மூத்தவர்களே அதிகம். வாடிய முகத்துடன் பலர், என்னைப்போன்று எதையோ தேடும் பரபரப்புடன் சில இளைஞர்கள், தங்களது மனைவி, குழந்தைகளுடன் சிறிது மகிழ்ச்சியுடன் சிலர் அங்கும் இங்கும். இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன், என்னுள் பல சிந்தனைகள்.

அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.



நாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன? வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.



அடுத்த‌ சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா? பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.


இதனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.


தமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:


குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.


மருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா?


ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!



இந்த இழ‌ப்புக‌ளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற‌ வேறொன்றை இழ‌ந்து தானே ஆக‌ வேண்டும்!!‌ இது தாங்க நிஜம்.. Reality!!


இன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.

மிக்க நன்றி அரசி!!

நன்றிகள் நட்புக்களே!!