|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts
Posted on 8:00 AM

மன நிறைவு

Filed Under () By SUFFIX at 8:00 AM

Picture source : http://www.designofsignage.com

இன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக‌ முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.

வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.

அப்போது ஒரு பெரியவர், கையில் மஞ்சல் பையுடன், உள்ளே நுழைந்தார், வரிசையின் நீளத்தைக் கண்டு அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது, பார்வை அங்கேயும், இங்கேயும் ஓடியது, நான் அவரை கூர்ந்து கவனித்ததாலோ என்னவோ, அவர் நேராக என்னிடம் வந்து, ஏதோ சொல்ல எத்தனித்தார், அதற்க்குள், வரிசையின் கடைசியிலிருந்து "அய்யா பெரியவரே, இங்கே இப்படி வந்து நில்லுங்க, நாங்களும் வேலை, வெட்டிய விட்டுட்டுதான் வந்திருக்கோம்", பெரியவர் என்னிடம், தம்பி, இந்த பணத்தை இன்னைக்குள்ள கட்டணும், இல்லாட்டி வட்டி போட்டுருவாங்க, கூட்டமும் அதிகமா இருக்கு, கவுன்ட்டரும் சீக்கிரம் மூடிருவாங்க போல, கொஞ்சம் உதவி செய்வீங்களா?, உதவி செய்தே ஆகவேண்டுமென தோன்றியது "சரி அய்யா, நீங்க அங்கே போய் உட்காருங்க, நான் பணத்தை கட்டிடுறேன்" எனக்கு பின்னாடி இருந்தவர், "ஹலோ, நீங்க பாட்டுக்கு வர்ரவங்க கிட்டே இப்படி சர்வீஸ் செஞ்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்போ வேலைய முடிக்கிறதாம், உங்க சமூக சேவையை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு உங்க வேலய மட்டும் பார்த்துட்டு போங்க சார்".

வட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத்தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, "அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.

மணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.

சொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,
"அய்யா நீங்களா?",
"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை",
அப்போ ரமேஷ்?,
"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா?",
"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு",
"இப்படி உக்காருங்க தம்பி", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா"

"அப்படியாப்பா, உங்கள பத்தி தான் இன்னக்கி முழுசும் பேசிக்கிட்டு இருக்கார்"

"எங்கே ரமேஷ், அவன் இன்னுமா குளிக்கிறான்", அதற்க்குள் ரமேஷ் வந்து விட்டார்,

"டேய் ரமேஷ், இவரு உன்னோட ப்ரென்டா, இவரு தாம்ப்பா இன்னக்கி பேங்க்கில் ஹெல்ப் பண்ணியது"


"ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், அந்த நல்லவன் நீ தானா, நீ மட்டும் ஹெல்ப் பண்ண்லைனா ஆறாயிரம் ரூபாய் தண்டத்திற்க்கு வட்டி கட்டியிருப்போம்".


நான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா? நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
எனது இந்த ஐம்பதாவது இடுகையை எனது அன்பான வலையுலக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவுடன் மன மகிழ்வும் அடைகிறேன்.