|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!


இந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா? அப்படின்னா இத படிக்காதீங்க!!
--------------------------------------------------


  • நீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்!!
  • ஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்!!
  • நீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.
  • நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு!!
  • நீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா? ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.
  • பாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.

  • நீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.

  • நாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்!!


  • நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.

  • நீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.

சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும்?, வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:

  • வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).

  • எதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).

  • தலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).

  • தனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).

  • நான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).

  • தனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள‌ உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).

  • ஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).

  • திறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).

  • த‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொறுப்புக்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து, அவ‌ர்க‌ளின் ஒத்துழைப்பின் அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ வேண்டும் (Share the goals).

  • சலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).

ஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு‌. GOOD LUCK!!

மூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான‌ ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே? ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.

வீட்டிற்க்கு வ‌ந்து ச‌ந்தோஷ‌த்தில் சிலின்ட‌ர‌ தூக்கி ஸ்டான்டு மேல‌ வ‌ச்ச‌துதான் தாம‌த‌ம், "கிளிக்கு" "க‌ட‌க்" ச‌த்த‌ம், ஒரு ப‌க்க‌ம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அட‌க் கொடுமையே!!

உடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில‌ எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில‌ இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.

சரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்!!). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க‌, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க!!

அடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல‌ எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, "சிலின்டர் வீலு எந்த ஆயி?" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு",!!
அடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே!!

டிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க!!



அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!


  1. வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.

  2. எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.

  3. மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.

  4. புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.

  5. தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.

  6. கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.

  7. வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.

  8. காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.

  9. நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.

  10. பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ!!



ன்பு - ஆக்சிஜன்

ரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.

ன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.

கை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.

ழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை

ர்வம்பு - கால விரயம்

திர்பார்ப்பினை குறைத்து மாற்றத்தினை தவிர்க்கலாம்.

ங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து

ற்றுமை எப்பொழுதும் எவருடனும்.


ய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.


ஒளடதம் : அழகிய‌ புன்னகை


ஷ‌பி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட!!

இந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.



அயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன? அங்கு அடைந்தது என்ன?



அடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.


இந்தக் கேள்விக்கான‌ விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென‌ தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.


பெற்றதையும், பெறாததையும் ஆராய்வதற்க்கு முன், நான் ஏன் அயல் நாடு வந்தேன் என சிறிது எண்ணிப்பார்க்கின்றேன், கல்லூரியில் பட்டப்படிப்பு, அதனிடையே ஒரு பட்டயப்படிப்பு, பட்டம் பெற்றவுடன், மேலும் படிப்பைத் தொடர்வதா, அல்லது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்க்குள் நுழைந்து விடுவோமா என ஒரு சிறிய மன‌ப் போராட்டம்.

இதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.

சரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.

அங்கும் இங்குமாய் சில மாதங்கள் ஓடியது, அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா அதான் உன்னோட எல்லா சொந்தங்களும் இருக்காங்கள்ள, இதுவே பெரும்பான்மையானவர்களின் அறிவுரை, ஆவல், வேண்டுகோள்.

சரி ஏற்பாடும் செய்தாகிவிட்டது, வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், எல்லோரைப்போல நானும் தீர்மானித்துக் கொன்டேன். நினைக்கும் போது நல்லாத்தான் இருக்கு.

சென்னையிலிருந்து புறப்பட்ட‌ விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.

விமானம் தரையிறங்கி முதன்முறையாக ஒரு அயல் நாட்டிற்க்குள் நுழைகிறேன், ஆயிரம் கணவுகளுடன்.

விமான நிலையத்தில் பல முகங்கள், இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே அதிகமாக‌ காணப்படனர், அதிலும் என்னைவிட வயதில் பலமடங்கு மூத்தவர்களே அதிகம். வாடிய முகத்துடன் பலர், என்னைப்போன்று எதையோ தேடும் பரபரப்புடன் சில இளைஞர்கள், தங்களது மனைவி, குழந்தைகளுடன் சிறிது மகிழ்ச்சியுடன் சிலர் அங்கும் இங்கும். இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன், என்னுள் பல சிந்தனைகள்.

அங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்!!.



நாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன? வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.



அடுத்த‌ சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா? பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.


இதனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.


தமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:


குழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.


மருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா?


ஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு!!



இந்த இழ‌ப்புக‌ளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற‌ வேறொன்றை இழ‌ந்து தானே ஆக‌ வேண்டும்!!‌ இது தாங்க நிஜம்.. Reality!!


இன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.

மிக்க நன்றி அரசி!!

நன்றிகள் நட்புக்களே!!