Picture source : www.rcowen.com
எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியின் சார்பாக 8, 9, மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு சந்திப்புக்கு சென்ற வாரம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து டாக்டர். கே.எஸ். டேவிட் (Centre Institute of Behaviour Science, Cochin) அவர்களை அழைத்திருந்தனர். Behaviour Science & Human Resource நிபுணரான இவர் பல்வேறு கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் இது போன்ற கருத்துரங்கள் நடத்தி வருகிறார்.
இரண்டு மணி நேரம் நடந்த கலந்துரையாடலில் பெரும்பாலும் அவர் வலியுறுத்திய கருத்துக்கள்:
குழந்தைகளிடம் நாம் நெருக்கமாகவும், நல்ல ஒரு நண்பனைப் போலவும் பழக வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுவதுடன், எந்த ஒரு பிரச்ணையும் எளிதாக, மனம் திறந்து பகிர்ந்து கொள்ள இலகுவாக இருக்கும், இல்லையேல், யாரிடம் சொலவது எனற குழப்பமே அவர்களின் மனச்சோர்வினைக் கூட்டும் அல்லது தவறான வழிமுறைகளை கையாள் நேரிடலாம். Be a Friend and Mentor!! குழைந்தைகளோடு சேர்ந்து நாமும் வளர வேண்டும் (Grow with your child).
இந்தக் காலச் சூழல், ஊடகத்தின் தாக்கம், பாலுணர்வைத் தூண்டக்கூடிய விடயங்கள் கைகளுக்கு எட்டும் தொலைவில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது, பெற்றோர்கள் எத்தனை கட்டுப்பாடு விதித்தாலும், நமக்குத் தெரியாமல் அதை உடைக்க பல்வேறு வழிகள், ஆக இந்த விடயத்தையும் பெற்றோர்கள் தெளிவாகவும் சரியாகவும் புரிய வைக்க வேண்டும், இல்லையெனில் நண்பர்கள், இணையம் வழியாக கிடைக்கும் தவறான தகவல்களால் வழி மாறிச்செல்லக்கூடும்.
பெற்றோர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம், அது குழந்தைகளுக்கு தெரியும்படியோ, அல்லது இருவருக்கிடையே உள்ள கோபத்தின் தாக்கத்தை குழ்ந்தைகளிடம் காட்டுவதோ கூடாது.
குழந்தைகளின் நினைவாற்றலை மூன்று வகைப்படுத்தலாம், செவி வழி (Auditory), பார்த்து உணர்தல் (Visual), அல்லது எதையும் செய்து பார்த்து (Practical) நினைவிற்கொள்தல். இம்மூன்றில் நமது குழந்தைகள் எவ்வகை என கவனித்து அதற்கேற்ப அணுக வேண்டும்.
(இந்த மவுச கிளிக் செஞ்சு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்ய வேண்டும்னு சொன்னா, சிலர் அப்படியா தலையாட்டிட்டு போய்டுவாங்க, சிலர் அதை க்ளிக்கி ஓப்பன் செஞ்சா தான் திருப்தி படுவாங்க)
குழந்தைகள் எதிர்பாராத தருணத்தில் பரிசளிக்க வேண்டும், மதிப்பெண் கூடுதல் எடுத்தால், முதல் மார்க் வாங்கினால் என மகிழ்ச்சி பகிர்தலை கட்டுப்படுத்த வேண்டாம்.
சில குழந்தைகள் கேள்விகள் நிறைய கேட்டுக்கொண்டே இருப்பார்கள், சலிப்படையாமல் தகுந்த பதில் சொல்லி அவர்களை திருப்தி படுத்த வேண்டும்.
குழந்தைகளை உலவு வேலைக்காக ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது, அம்மா யார்கிட்ட போன் பேசுனாங்க? அப்பா அந்த ஆன்ட்டி கிட்ட என்ன பேசினாங்க, இது மாதிரி சந்தேகங்களை குழந்தைகளைக் கொண்டு அணுகவேண்டாம். இது பெற்றோர்களின் மேல் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் அல்லது இதை வைத்து குழந்தைகள் தவறான வகையில் பயன்படுத்த ஊக்கமளிக்கும்.
Decision Making என்று சொல்லக்கூடிய முடிவு எடுக்கும் திறனை சிறு வயதிலிருந்தே ஊக்கபடுத்தி, சுதந்திரமும் கொடுக்க வேண்டும்.
பல திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் அந்த நிபுணர் பகிர்ந்து கொண்டது, நிகழ்ச்சியின் நோக்கத்தையும், நமது பொறுப்பையும் வலுவாக உணர்த்தியது.