தினமும் காலைப்பொழுதில் மட்டும் மகளை பள்ளியில் கொண்டுவிடுவது சமீபகாலமாக என்னுடைய பொறுப்பில் வந்து விட்டது, அந்த ஐந்து நிமிடத்திற்குள் தினமும் ஒரு சில நிகழ்வுகளை சொல்லி வைத்தாற்போல் கடந்து செல்வது வழக்கம்.
வீட்டைவிட்டு இறங்கியவுடன் எதிரே ஒரு வயதான பங்க்ளாதேஷி, தனது ஆளுகையின் (ஆமாம், இங்கே ஹாரிஸ் என அழைக்கப்படும் வாட்ச்மேனுக்கு தான் அவ்ளோ அதிகாரமும்) கீழ் தங்கியிருப்பவர்களின் அனைத்து வாகன்ங்களை துடை துடையென பளபளப்பாக்கும் மும்முரத்தில் இருப்பார், காலை வேளையிலேயே அவருடைய உழைப்பின் தளர்ச்சி தென்படும்.
சாலை திருப்பத்தில் உள்ள் குப்பைத்தொட்டியில் உப்யோகமான பொருட்கள் எதுவும் கிடைக்காதா என ஒரு குச்சியால கிண்டி கிளரி ஒரு தள்ளுவண்டியுடன் நிற்கும் சோமாலியப் பெண், பெரும்பாலும் அவ்வண்டி நிறைந்தே காணப்படும், துச்சமென தூக்கி எரியும் பல பொருட்கள் பயனுள்ளதாக மாறுவது மகிழ்ச்சியே..
இரண்டு வீடு தள்ளி, ஒரு ஆஃப்கானியச் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒரு வேன், அவன் என்றுமே தாமதப் பேர்வழி போல், அவனை அரபியில் திட்டி தீர்க்கும் எகிப்திய ஓட்டுனர். அந்த வாகனத்தினுள் உற்று நோக்கினால், உலக நாடுகளின் வளரும் நட்சத்திரங்கள் கண்மூடி ஆழ்ந்த சிந்தனையில்.
சற்று தூரத்தில் தனது வீட்டின் பங்க்ளாதேஷ் காவளாளியை கை பிடித்தபடி பள்ளிக்குச் செல்லும் மலேசிய சிறுமி.
ஒரு சில மாதங்களேயான கைப்பிள்ளையை தனது இரு கைகளாலும் இருக்கிப் போர்த்தியபடி ஒரு தாய், மூண்றாவது கைவேண்டி அவரின் முந்தானையை பிடித்து, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி முதுகினில் மூட்டையை சுமந்து பள்ளிக்குச் செல்லும் அவரது ஒன்றாம் வகுப்பு மகள்.
தனது மூன்று பெண் குழந்தைகள் பின் தொடர, இரண்டு கைகளிலும், முதுகிலும் அவர்களின் பைகளை சுமந்தபடி ஒரு பாக்கிஸ்த்தானி, அவருடைய உயரமும், அவர் சுமந்து செல்லும் விதமும் ஏதோ மலை ஏறச் செல்வது போனற காட்சி..
இன்று வியாபாரம் சூடு பிடிக்கும் என நம்பிக்கையில் வாசல், படிகளை நன்றாக கூட்டி பெருக்கி, வியாபாரத்தை பெருக்க தயாராக நிற்கும் ’கொச்சி பஷீர் காக்கா’.
நீச்சள் குளம், ஏரோபிக்ஸ் இன்னும் பலவகையறாக்களில், சேர்த்து வைத்துள்ளதை குறைப்பதறகாகவும், உள்ளதை உள்ளபடியே வைத்துக் கொள்ளவும், பெண்களுக்கான மையம், சாலையை அடைத்தபடி அதன் முன் டாம்பீக வாகனங்கள்.
சரி பிள்ளைகளை பள்ளியில் விட்டாச்சு, விட்டிற்கு போகும் முன், அன்றைய செய்திகளை அப்டேட் செய்தபடி பள்ளி வாயில் முன் சிறு வட்டஙகளாய் அம்மாக்கள்.
அடக்கமான அப்பாவாய் வழக்கம்போல் அலுவலகம் செல்ல ஆயத்தமாய் இந்தப் பதிவாளன்.