|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 12:30 PM

தீர்வு

Filed Under () By SUFFIX at 12:30 PM


சின்ன வயசு
சிகரெட் ஆசை
சிறிதாய் சீண்ட‌
சுலபமாய் பற்றியது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

மதுப் பழக்கம்
மதி மயக்குமாமே
மெதுவாய்‌ தீண்ட‌
அதுவாக தொடர்ந்தது
நல்ல வேளை
யாரும் காணவில்லை

எல்லை மீறிய இன்பம்
பகலும் இரவானது
சிந்தையில்லாமல் சிந்தி
சில்லரையும் கரைந்தது‌
நல்ல வேளை
யாரும் காணவில்லை

சின்ன வயசு
அழுது புலம்பும் அம்மா அப்பா
அசையா உடல் கண்டு
அதிர்ந்தது பலர் நெஞ்சம்

நல்ல வேளை
நான் அங்கு இல்லை!!
---------------------------------------
அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
WISH YOU ALL A HAPPY, HEALTHY & PROSPEROUS NEW YEAR!!


Posted on 4:05 PM

தேன்'நீ'

Filed Under () By SUFFIX at 4:05 PM


கழுகுப் பார்வை

முட்டி மோதியது
திட்டமிட்டே வட்டமிட்டது
வண்டின் கொடிய‌ அம்புகள்!!

காதல் மகரந்தம்
நுகரத் துணிவில்லை
மண்டியிட்டது மலரிடம்
மானுட வேடம்!!

அழகின் செருக்கில்
மலரின் சிரிப்பு
ஆதவன் ஒளியில்
மின்னலாய் மிளிர்ந்தது!!

வெதும்பிய வண்டு
வதங்கா ஆசை
துவலா வேட்கை
தணியா விருப்பம்!!

பெயர்ந்தது பொழுதும்
குனிந்தது மலரும்
கணிந்தது பார்வை
வண்டது வென்றது
களிப்பினில் குளித்தது

மோக மேகம்
திரண்டது திரளாய்,
கணமழையில் இன்பம்
தேனாய் நனைந்த‌து!!

(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா??!!)

சுழலும் வீடு

இது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க. சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி (பிங்க்கி & பாங்க்கின்னு வச்சுக்கலாம்), ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம். நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும். (Reference : www.greendiary.com)


சிக்னல் சிக்கல்

எங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது ஒரு சிக்னல் இருக்கு, சில மாதங்களுக்கு முன் அதுல கவுன்ட்டிங் முறை, அதாவது சிவப்பு நிறம் வந்தா 90 வினாடிகளும், பச்சை நிறம் மாறும் போது 30 வினாடிகளும் இருக்கும், சிறிது நாட்களாக பச்சை நிறம் மாறினால் அது 01 லேயே நிக்கும், நாம பாட்டுக்கு இப்ப மாறுமோ, அப்போ மாறுமோன்னு வண்டிய உருட்டிக்கொண்டு போகணும். ஆனா நேற்றிலிருந்து பாருங்க சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து எரிவதால் இன்னும் பிரச்ணை கூடுதலா ஆயிடுடச்சு. ஒரே டென்ஜன்...


வருடம் 2010

இன்னும் இரண்டு வாரத்தில் புது வருடம் 2010 பிறக்கபோகுது, அதை இரண்டாயிரத்து பத்துன்னு (Two thousand and ten))சொல்வதா இருபது (Twenty Ten))பத்துன்னு சொல்வதான்னு ஒரு சர்ச்சை பல நாடுகளில் கிளம்பி இருக்கு, யாருப்பா அது, கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை, நீங்க எப்புடி வேணும்னாலும் சொல்லுங்க ஆனா அமைதியா அடிச்சுக்காம எங்கள வாழ விட்டா சரி.

Posted on 8:00 AM

மன நிறைவு

Filed Under () By SUFFIX at 8:00 AM

Picture source : http://www.designofsignage.com

இன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக‌ முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.

வங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.

அப்போது ஒரு பெரியவர், கையில் மஞ்சல் பையுடன், உள்ளே நுழைந்தார், வரிசையின் நீளத்தைக் கண்டு அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது, பார்வை அங்கேயும், இங்கேயும் ஓடியது, நான் அவரை கூர்ந்து கவனித்ததாலோ என்னவோ, அவர் நேராக என்னிடம் வந்து, ஏதோ சொல்ல எத்தனித்தார், அதற்க்குள், வரிசையின் கடைசியிலிருந்து "அய்யா பெரியவரே, இங்கே இப்படி வந்து நில்லுங்க, நாங்களும் வேலை, வெட்டிய விட்டுட்டுதான் வந்திருக்கோம்", பெரியவர் என்னிடம், தம்பி, இந்த பணத்தை இன்னைக்குள்ள கட்டணும், இல்லாட்டி வட்டி போட்டுருவாங்க, கூட்டமும் அதிகமா இருக்கு, கவுன்ட்டரும் சீக்கிரம் மூடிருவாங்க போல, கொஞ்சம் உதவி செய்வீங்களா?, உதவி செய்தே ஆகவேண்டுமென தோன்றியது "சரி அய்யா, நீங்க அங்கே போய் உட்காருங்க, நான் பணத்தை கட்டிடுறேன்" எனக்கு பின்னாடி இருந்தவர், "ஹலோ, நீங்க பாட்டுக்கு வர்ரவங்க கிட்டே இப்படி சர்வீஸ் செஞ்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்போ வேலைய முடிக்கிறதாம், உங்க சமூக சேவையை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு உங்க வேலய மட்டும் பார்த்துட்டு போங்க சார்".

வட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத்தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, "அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.

மணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.

சொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,
"அய்யா நீங்களா?",
"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை",
அப்போ ரமேஷ்?,
"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா?",
"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு",
"இப்படி உக்காருங்க தம்பி", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.
"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா"

"அப்படியாப்பா, உங்கள பத்தி தான் இன்னக்கி முழுசும் பேசிக்கிட்டு இருக்கார்"

"எங்கே ரமேஷ், அவன் இன்னுமா குளிக்கிறான்", அதற்க்குள் ரமேஷ் வந்து விட்டார்,

"டேய் ரமேஷ், இவரு உன்னோட ப்ரென்டா, இவரு தாம்ப்பா இன்னக்கி பேங்க்கில் ஹெல்ப் பண்ணியது"


"ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், அந்த நல்லவன் நீ தானா, நீ மட்டும் ஹெல்ப் பண்ண்லைனா ஆறாயிரம் ரூபாய் தண்டத்திற்க்கு வட்டி கட்டியிருப்போம்".


நான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா? நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
எனது இந்த ஐம்பதாவது இடுகையை எனது அன்பான வலையுலக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவுடன் மன மகிழ்வும் அடைகிறேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனைத் தொடர்ந்து வானம் தினமும் 2012 படக்காட்சி போல மிரட்டிக் கொண்டு இருந்தது. இன்றைக்கு தான் வானம் தெளிவாக இருந்தது. இந்தப் படங்கள் எங்கள் அலுவலகத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்தது.

வானம் 10.12.2009


வானம் 08.12.2009







சென்ற வாரம் சென்னைக்கு ஒரு துரிதப் பயணம், இது வரை சவூதியா அல்லது எமிரேட்ஸில் தான் பயணிப்பது வழக்கம், முதன் முறையாக சிரிலங்க்கன் ஏர்லைன்ஸில் செல்லலாம் என டிக்க்ட் போட்டாச்சு, அதாவது கொழும்பு வழியாக சென்னைக்கு செல்லும். விமானம் மாலை எட்டு மணிக்கு புறப்பட வேண்டும், ஏதோ மின்சாரக் கோளாறாம், ஒரு மணி நேரத்தில் சரியாகி விடும்னு சொன்னாங்க, முன்பு எமிரேட்ஸினால் நிறுவகிக்கப்பட்டது, அப்போ நன்றாக இருந்ததுன்னு இப்போ இப்படி ஆயிடுச்சேன்னு சக பயணிகள் புலம்பித்தள்ளினார்கள், இது போன்று கோளாறுகளுக்கு சரியான Planned Maintenance இல்லைன்னு நினைக்கிறேன்.

மணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க. பத்து நிமிடம் கழிச்சு ஒரு ஆள் வந்து விமான் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, சும்மா வந்த கூப்பனை ஏன் விடனும்னு அதையும் வாங்கி லபக்கியது சொல்லனுமா என்ன?.

நள்ளிரவு ஒரு மணிக்கு விமானத்தில் ஏறி உட்கார்ந்தாச்சு, விமானத்தில் உள்ளே நுழையும்போது, அயூபவன், அயூபவன்னு அந்தப் பெண் சாவி கொடுத்த பொம்மையைப் போல‌ ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொலவது, எனக்கு என்னவோ தேவையில்லாத ஒரு சடங்காக தோண்றியது. கேப்டன் Ready for take offனு சொல்லிட்டு, தாமத்திற்க்கு மன்னிக்கவும், IATA விதிப்படி, விமான ஓட்டியும் சிப்பந்திகளும் ஒரு சில மணி நேரத்திற்க்கு அதிகமாக வேலையில் அமர்த்தக்கூடாதாம், அதனால் உங்களை குவைத்திற்க்கு அழைத்துச் செல்கிறோம்னு, அங்கிருந்து வேறு ஒரு க்ரூப் இந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்னு ஒரு குண்டை போட்டாங்க, சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.

விமானம் அதிகாலை 4 மணியளவில் குவைத் சென்றடந்தது, கேப்டன் மறுபடியும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார், அதாவது ஒரு சிறு மணித்துளிகளில் விமானம் புறப்படும், சரி எத்தனை மணிக்குப்பா புறப்படும், கீழே இறங்கி கொஞ்ச நேரம் காத்திருங்க, நாங்க அறிவிப்போம்னு சொன்னாங்க, எல்லொரும் முனுமுனுத்துக் கொண்டே இறங்கியவுடன், எல்லோருக்கும் ஹோட்டல் தங்குவதற்க்கு கூப்பன் கொடுத்தாங்க, இது எதுக்குப்பா, அப்பொத்தான் சொன்னங்க விமானம் 11 மணிக்குதான் புறப்படுமாம், எனக்கு என்னச் செய்வதன்றேன் புரியவில்லை, செல்வதோ ஒரு வாரப் பயணம் இதில் ஒரு நாள் வீணாகி விட்டதேன்னு வருத்ததுடன் கோபம், எதுவா இருந்தாலும் ஏர்லங்க்கா தலைமையகத்திற்க்கு கம்ப்ளெய்ன்ட்டு பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க, அதுவும் சரியே, பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். விமான நிலையத்திலேயே இருந்தது அந்த ஹோட்டல், அறைக்கு எதிரிலேயே விமானங்கள் அங்கங்கே நிறுத்தி வைத்தது இருந்தார்கள், லைசன்ஸ் இருந்தால் அதனை எடுத்துக்கிட்டு பறந்திடலாம்னு தோண்றியது.

(ஹோட்டல் அறைக்குமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்)

சரியாக 11:30 மணிக்கு குவைத்திலிருந்து விமானம் புறப்பட்டது, அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள், இன்ஜின் திறம் அவ்வளவு தான் போல, அதனால் வேகமும் குறைவாகவே இருந்தது, மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டரே செல்ல முடிந்தது, இதுவே எமிரேடஸாக இருந்தால் வேகத்தை நிச்சயமாக கூட்டி இருப்பார்கள்.

ஏர்லன்ன்காவின் ஸ்பெஷல் மதுவினை அந்த மாதுக்கள் அளவில்லாமல் ஊற்றிக் கொடுப்பது தானாம், எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், "என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.

இதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.

மாலை 6 மணிக்கு கொழும்பு சென்றைடைந்தது, பச்சைப் பசேலன அருமையான ஊர், விமான நிலையத்தின் அமைப்பு துபாய் விமான நிலையத்தினைப் போலவே இருந்தது, ஒரே ஆள் தான் கட்டியிருப்பாரோ? ரொம்ப யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை, சென்னைக்கு விமானம் புறப்படத்தயார இருக்கு உடனே போங்கன்னு விரட்ட,
வேகமாக ஓடி துண்டை போட்டாச்சு, பாவம் திருச்சிக்காரங்க, அவங்களுக்கான இணைப்பு விமானம் அடுத்த நாள் தானாம், அதனால் அவ்ங்க மறுபடியும் கொழும்பில் ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். எத்தனை உறவினர்கள் அங்கே விமான நிலையத்தில் இவர்களின் வருகைக்காக‌ காத்து கிடக்கிறார்களோ.

விமானம் சென்னை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படது, ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது, அதாவது விமானம் நகர்ந்து 15 நிமிடம் வரைக்கும், அது போல தரையிறங்கும் முன் 15 நிமிடம் வரைக்கும் தங்களது கைப்பேசிகளை அமர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார், இது விளக்கமான அறிவிப்பு, முன்னர் குவைத் - கொழும்பு பயணத்தில் நடந்த விவாதம் தேவையில்லாதது எனப் புரிந்தது. ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.

ஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா!!

எவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours!! இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே!! அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மைலாப்பூர் குளத்தை சுற்றி இருக்கும் கடைகளை ஒரு வலம் வந்தால் போதும் சவூதியில் கிடைக்காத அனைத்து பொருளும் விலை மலிவாகவும், தரமானதாகவும் வாங்கி விடலாம். (கோணார் நோட்ஸோ, பட்டுப்புடவையோ, கெட்டி உருண்டையோ - everything available).

அதிர்ஷ்டவசமாக சென்னையிலிருந்து திரும்பிய பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நன்றாகவே இருந்ததது, ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும், சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்!!